BACK TO ENGLISH

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

கடற்சார் மாநிலமான தமிழகம் 1,076 கி.மீ நீளமுடைய கடற்கரையையும், 41,412 ச.கி.மீ கண்டத்திட்டு பகுதியையும், 1.90 இலட்சம் ச.கி.மீ சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் கொண்டுள்ளதால், 5.209 இலட்சம் டன் மீன் உற்பத்திக்கு பங்களிக்கிறது. இந்த ஆதாரங்கள் 5,803 மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் 41,337 நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 10.48 இலட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கின்றன. நீர்த்தேக்கங்கள் பெரிய நீர்பாசன குளங்கள், சிறிய பாசன குளங்கள், குறுகிய கால நீர்நிலைகள், குளங்கள், ஆறுகள் மற்றும் கழிமுகங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 3.83 இலட்சம் ஹெக்டர் உள்நாட்டு நீர்வள ஆதாரங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. உள்நாட்டு மீனவ மக்கள் தொகை 2.35 இலட்சம் (2018-2019) ஆகும். 56,000 ஹெக்டர் பரப்பளவில் உவர்நீர் மீன்பிடிப்பும், 6115.68 ஹெக்டர் பரப்பளவில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பும், குறிப்பாக இறால் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது.


மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடிப்பிற்கு உகந்த கடல் வளம், உவர் நீர்வளம், மற்றும் உள்நாட்டு மீன்வள ஆதாரங்களை தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. மீன்வள ஆதாரங்களின் சமூக மற்றும் பொருளாதார பரிமானத்திற்கு தமிழக அரசு அதிமுக்கியத்துவம் அளிக்கிறது. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தினால் செயல்படுத்தப்பட்ட இந்திய மீன்வளச் சட்டம் 1897, இந்தியா முழுவதிலும் மீன்வளச்சட்டங்கள் இயற்றிட வழிவகுத்தது. அதிக அளவிலான மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தல் மற்றும் உணவுபாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றின் மூலம் மீன்வளப்பிரிவானது நாட்டின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.


2017-2018 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 12.59 மில்லியன் டன்கள் ஆகும். இந்தியா உலக அளவில் மீன் உற்பத்தியில் இரண்டாம் இடமும், உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாம் இடமும் வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மீன்வளம் 1ரூ பங்களிக்கிறது. 2018-2019 -ம் ஆண்டில் நாட்டின் மொத்த மீன்உற்பத்தி 6.90 இலட்சம் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 1,28,845 மெட்ரிக் டன்கள் கடல் மீன் பொருட்கள் ஏற்றுமதி செய்து ரூ. 5591.49 கோடி ஏற்றுமதி வருவாய் ஈட்டியுள்ளது.


தமிழகத்தில் தனிநபர் மீன் உண்ணும் விகிதம் ஆண்டிற்கு 11.60 கி.கி என்றிருக்க வேண்டிய நிலையில், அது 9.83 கி.கி என்றளவில் மட்டுமே உள்ளது. மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து மீன்வள ஆதாரங்களிலும் மீன் உற்பத்தியினை அதிகரித்திட வேண்டிய தேவை உள்ளது. கிராமப்புற பகுதிகளில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் வருவாய் ஈட்டுவதற்குமான முக்கிய தொழிலாக வளர்ந்துள்ளது. வேளாண்மையுடன் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைந்து செய்யப்படும் தொழில் நுட்பமானது, மீன்வளர்ப்பில் ஒரு அலகிற்கான உற்பத்தியை அதிகரிப்பதாக நிரூபனமாகியுள்ளது. வருங்காலங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை மூன்று மடங்காக உயர்த்திட அரசு உறுதி கொண்டுள்ளது.